×

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 551க்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி; அமைச்சர் சேகர் பாபு தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 551க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு பக்தர்கள் பார்வையிடும் வகையில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  ஆகம விதிகளின்படி பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்.

பழமை வாய்ந்த திருக்கோயில்களில் அவற்றின் பழமை மாறாது புனரமைத்தல், புதுப்பித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை வல்லுநர்கள் கருத்துரு பெற்று, மண்டல அளவிலான வல்லுநர் குழு மற்றும் மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 551க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு திருப்பணி நடைபெற  இவ்விரு வல்லுநர் குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருப்பணிகள் முடிவுற்றவுடன் திருக்குடமுழுக்கு நடத்தப்படும். மேலும், பக்தர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள திருக்கோயில்களின் திருப்பணிகள் குறித்த விவரங்களை www.hrce.tn.gov.in http://www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் ‘திருப்பணி வல்லுநர் குழு ஒப்புதல்’ என்ற பகுதிக்கு சென்று மாவட்டம் வாரியாக திருக்கோயில்களை தேர்வு செய்து எளிமையாகவும் வெளிப்படையாகவும் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Department of Hindu Religious Affairs ,Minister ,Sehgar Babu , Permission to renovate more than 551 temples under the control of the Department of Hindu Religious Affairs; Information from Minister Sehgar Babu
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...